சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
அஜித் தோவலுடன் சீன அமைச்சர் பேச்சு!
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், பஹல்காம் தாக்குதலை கண்டிப்பதாகவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி தெரிவித்ததாக சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இன்று போர் நிறுத்தத்துக்கு இரு நாடும் ஒப்புதல் அளித்தது.
இருப்பினும், இன்றிரவு பாகிஸ்தான் ஒப்புதலை மீறி தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அஜித் தோவலுடன் பேசியது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”மே 10, 2025 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் தொலைபேசியில் உரையாடினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வது அவசியம் என்றும் தோவல் கூறினார். போர் இந்தியாவின் விருப்பம் அல்ல, எந்தத் தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உறுதிபூண்டு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகின்றன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதாகவும் அஜித் தோவலிடம் வாங் யி கூறினார். ஆசியாவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் கடின உழைப்பால் ஏற்பட்டது, மேலும் போற்றப்பட வேண்டியவை. இந்தியாவும் பாகிஸ்தானும் தவிர்க்க முடியாத சீனாவின் அண்டை நாடுகள். போர் இந்தியாவின் விருப்பம் அல்ல என்ற அஜித் தோவல் தெரிவித்ததை சீனா பாராட்டுகிறது.
மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி காத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைக் கையாண்டு நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கும் என்று சீனா நம்புகிறது. இரு நாடுகளும் போரை நிறுத்துவதை சீனா ஆதரிக்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்காகவும், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகவும் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.