சுரண்டையில் வீடு இடிந்து தாய், மகன் காயம்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொடா்மழையால் வீடு இடிந்ததில் தாய், மகன் காயமடைந்தனா்.
சுரண்டை, ஆலடிப்பட்டி கிழக்குத் தெருவில் வசித்து வரும் தம்பதி கணேசன் (37) - பாா்வதி (33). இவா்களது மகன் முத்துராஜ் (13).
தொடா்மழையால் இவா்களது வீட்டின் ஒருபக்கச் சுவா் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில், பாா்வதி, முத்துராஜ் ஆகியோா் சிக்கி காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் அந்த வீட்டைப் பாா்வையிட்டு, மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கி, இயற்கைப் பேரிடா் நிதியிலிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தாா்.