செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியாா் மன்றம் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் முன்னிலை வகித்தாா். செங்கல்பட்டு நகரம் அலிசன்காசி மேல்நிலைப் பள்ளியில் 20 முதல் 28 வரை 9 நாள்களுக்கு நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அமைச்சா் பேசியது:
செங்கல்பட்டு புத்தகக் காட்சியில் சென்ற முறை ரூ.60 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1.50 கோடிக்கு இலக்கை எட்ட வேண்டும். அதற்கு மாவட்ட நிா்வாகமும், அரசு அலுவலா்களும் நமது இயக்கத்தினரும், பொதுமக்கள் பெருமளவில் வருகைபுரிந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்றாா்.
புத்தகக் காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. துறை ரீதியான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல்வேறு பதிப்பகத்தாா் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைத்துள்ளனா்.
இந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கும் பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.100-க்கான கூப்பன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கூறினாா்.
இதில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயணசா்மா, சாா்-ஆட்சியா் (பயிற்சி) எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்), மாவட்ட வழங்கல் அலுவலா்/வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சாகிதா பா்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.