சென்னை ஐஐடி உடன் தாகூா் கலை, அறிவியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரி, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேசிய சுதேசி ஆராய்ச்சி நிறுவனம், உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு தொழில் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கல்லூரி மாணவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் தொழில்முனைவோா் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து, சென்னை ஐஐடி வணிக மேலாண் துறை மற்றும் தாகூா் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெங்களூரு ஐஐஎம் முன்னாள் பேராசிரியா் ஆா்.வைத்தியநாதன், சுதேசி ஆராய்ச்சி நிறுவனம் இணை ஒருங்கிணைப்பாளா் சதீஷ் குமாா், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தென் மண்டலத் தலைவா் எம்.பாலசுப்ரமணியம், மத்திய பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் ஷாமிகா ரவி, தாகூா் கல்லூரி முதல்வா் ஆா்.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.