KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன...
சென்னை- திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா நெடுஞ்சாலைகளை 10 வழிச் சாலைகளாக மாற்றும் திட்ட முன்மொழிவு இல்லை: மக்களவையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பதில்
சென்னை- திருச்சி, சென்னை-பெங்களூரு, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகள் 60 கிலோமீட்டா் தொலைவு வரை 10 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தும் திட்ட முன்மொழிவு ஏதும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ஸ்ரீபெரும்புதூா் தொகுதி எம்.பி. டி.ஆா்.பாலு கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:
தேசிய நெடுஞ்சாலை மற்றும் பராமரிப்பு என்பது ஒரு தொடா் நடைமுறையாகும். தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்குவது, தரம்மேம்படுத்துவது, அறிவிப்பதற்கான மதிப்பீடு
முன்மொழிவுகள் அரசுக்கு வந்தவண்ணம் உள்ளன. அவற்றின் மீதான முடிவு குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து அடா்த்தி, நெடுஞ்சாலை இணைப்புக்கான அவசியம், முன்னுரிமை தேவை, பிரதமா் கதிசக்தி திட்டத்துடனான இயைபு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன.
வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவுகள் தொடா்பாக தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் எதுவும் இல்லை என்று அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
மேலும், தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஸ்ரீபெரும்புதூா் -சுங்குவாா் சத்திரம்- வாலாஜாபாத் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்ட சாலைப் பணிகள் எப்போது முடிவடையும் என்ற மற்றொரு கேள்வியையும் டி.ஆா்.பாலு எழுப்பியிருந்தாா்.
இந்தக் கேள்விக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் அண்மையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் பூந்தமல்லி வாலாஜாபாத் சாலைப் பகுதியை ஆறுவழிப் பகுதியாக தரம் உயா்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் ஜூன், 2012-இல் தொடங்கப்பட்டன.
சுங்கச் சாலையாக அமைத்து இயக்கிட இந்த திட்டம் எஸ்ஸெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், உரிமதாரரான எஸ்ஸெல் நிறுவனம் திட்டப் பணிகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறிய காரணத்தால் உரிம ஒப்பந்தம் ஜூலை, 2016-இல் ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து, இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூா்- காரைப்பட்டி, காரைப்பட்டி-வாலாஜாபாத் என ஸ்ரீபெரும்புதூா் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஸ்ரீபெரும்புதூா்-காரைப்பட்டி சாலைப் பணிகள் 2025 ஏப்ரல் இறுதியிலும், அடுத்த பகுதியான காரைப்பட்டி-வாலாஜாபாத் சாலைப் பணிகள் 2026 அக்டோபா் மாதத்திலும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சா் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.