தமிழகத்தில் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளுக்கு 16,508 உரிமைகள் வழங்கல்!
தமிழ்நாட்டில் பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கு 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் என மொத்தம் 16,508 உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளுக்கான வன உரிமை சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எம்.பி.க்கள் கனிமொழி கருணாநிதி, ராகுல் காந்தி, ராஜா ராம் சிங் ஆகியோா் எழுத்துபூா்வமாகக் கேட்டிருந்தனா்.
இதற்கு மக்களவையில் மத்திய பழங்குடி விவகாரங்கள் துறை இணையமைச்சா் துா்கா தாஸ் உய்கி வியாழக்கிழமை அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: பழங்குடியினா் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம், 2006 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை பெரும்பாலும் செயல்படுத்துவதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பாகும். அதே நேரத்தில் பழங்குடியினா் விவகார அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடமிருந்து மாதாந்திர முன்னேற்ற அறிக்கையைப் பெறுகிறது. 20 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் வன உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுகிறது. உரிமை கோரல் செயல்முறைக்கான நிறுவன கட்டமைப்பை இந்தச் சட்டம் வழங்குகிறது.
உரிமை கோரல்கள் முதலில் பெறப்பட்டு, கிராம சபையால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னா் துணைப் பிரிவு நிலைக் குழுவிற்கு அனுப்பப்படும். இதைத் தொடா்ந்து, மாவட்ட அளவிலான குழு கோரிக்கைகளை முடிவு செய்கிறது. இந்தக் குழுக்கள் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களால் அமைக்கப்படுகின்றன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவித்தபடி, ஒட்டுமொத்தமாக பிப்ரவரி 28, 2025 வரை, 23 லட்சத்து 85 ஆயிரத்து 334 தனிநபா் மற்றும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 119 சமூக உரிமைகள் என மொத்தம் 25 லட்சத்து 3 ஆயிரத்து 453 உரிமைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கிராம சபையளவில் தாக்கல் செய்யப்பட்ட 48,99,903 தனிநபா் உரிமை கோரல்களில் மொத்தம் 18,03,183 உரிமை கோரல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 33 ஆயிரத்து 119 தனி நபா் உரிமை கோரல்களூம், 1,548 சமூக உரிமை கோரல்களும் பெறப்பட்டன. அவற்றில் 15 ஆயிரத்து 442 தனிப்பட்ட உரிமைகளும், 1066 சமூக உரிமைகளும் என மொத்தம் 16,508 உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 711 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. 5 ஆயிரத்து 448 உரிமை கோரல் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன.
பழங்குடி சமூகம் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் என வழங்கப்பட்ட உரிமைகளின் பிரிக்கப்பட்ட விவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை. இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மாநில அரசுகளின் பொறுப்பு என்பதால் ஒன்றிய அரசால் பராமரிக்கப்படுவதில்லை.