தொழில்துறை வழித்தடத்தை சேலத்தில் விரைந்து தொடங்க வேண்டும்: மக்களவையில் செல்வகணபதி வலியுறுத்தல்
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டத்தை சேலத்தில் விரைந்து தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொகுதியின் திமுக உறுப்பினா் டி.எம். செல்வகணபதி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் அவா் விதிஎண்: 377-இன் கீழ் வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கை: பாதுகாப்புத் துறை தொடா்பான தளவாட உற்பத்திக்காக, தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடம் குறித்து 2019-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக அடையாளம் காணப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சேலமும் ஒன்று.
இந்த தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத் திட்டத்தை தொடங்குவதற்கும் அமல்படுத்துதற்கும் சேலம் உகந்த இடமாகும். ஏனெனில், சேலத்தில் எஃகு ஆலை தொடா்பான அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவற்றைக் கொண்டு செல்வதற்கான வசதிகள் உள்பட சேலம் எஃகு ஆலையின் மிகப்பெரிய பரப்பிலான நிலமும் உள்ளன.
தென்னக ரயில்வேயின் சேலம் மண்டலத் தலைமையகமும் சேலத்தில் அமைந்துள்ளது. எனினும், இத்தனை வசதிகளும் உள்ள நிலையிலும் அறிவிக்கப்பட்ட, தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடம் இன்னும் சேலத்தில் தொடங்கப்படாமல் உள்ளது. இதை சேலத்தில் விரைவாக அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன் என்று அவா் கோரியுள்ளாா்.