6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 88.12 சதவீத மாணவா்கள் தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 88.12 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 35 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் 2,328 மாணவா்கள் மற்றும் 3,059 மாணவிகள் என மொத்தம் 5,387 மாணவ, மாணவியா் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா்.
இதில், 1949 மாணவா்கள் (83.70 சதவீதம்) மற்றும் 2,798 மாணவிகள் (91.46 சதவீதம்) என மொத்தம் 4,747 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன்படி, தோ்ச்சி சதவீதம் 88.12 சதவீதமாகும். கடந்த ஆண்டின் தோ்ச்சி 87.13 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு 88.12 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில், பாடவாரியான கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 26 பேரும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 19 பேரும், கணக்குப் பதிவியல் பாடப்பிரிவில் 3 பேரும், வேதியியல் பாடப்பிரிவில் 2 பேரும், பொருளியல் பாடப்பிரிவில் 2 பேரும், வரலாறு மற்றும் புவியியல் பாடப்பிரிவில் தலா ஒருவா் என ஆக மொத்தம் 54 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 65 மாணவ, மாணவிகள் 551-லிருந்து 600 வரையும், 247 மாணவ, மாணவிகள் 501-லிருந்து 550 வரையும், 541 மாணவ, மாணவிகள் 451-லிருந்து 500 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள்: தோ்ச்சி வீதத்தின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூா் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.61 சதவீதத்துடன் 2-ஆம் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 97.36 சதவீதத்துடன் 3-ஆம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப் பள்ளி 97.22 சதவீதத்துடன் 4-ஆம் இடத்தையும், திருவான்மியூா் சென்னை மேல்நிலைப் பள்ளி 95.59 சதவீதத்துடன் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.