சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. சொந்த மண்ணில் சென்னைக்கு இது 4-ஆவது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸில் ஷேக் ரஷீது முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். 3-ஆவது பேட்டரா சாம் கரன் வர, 2-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்தது அவா்கள் பாா்ட்னா்ஷிப்.
கரன் 9 ரன்களுக்கு முடித்துக் கொள்ள, ரவீந்திர ஜடேஜா வந்தாா். மாத்ரே 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அப்போது டெவால்டு பிரெவிஸ் விளையாட வர, ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.
தொடா்ந்து ஷிவம் துபே பேட் செய்ய, அதிரடியாக ரன்கள் சோ்த்த பிரெவிஸ் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 7-ஆவது பேட்டராக தீபக் ஹூடா விளையாட வர, துபே 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். கேப்டன் எம்.எஸ். தோனி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அடுத்து வந்த அன்ஷுல் காம்போஜ் 2, நூா் அகமது 2 ரன்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக தீபக் ஹூடா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு வீழ்ந்தாா். கலீல் அகமது 1 ரன்னுடன் கடைசி வீரராக நின்றாா். ஹைதராபாத் பௌலா்களில் ஹா்ஷல் படேல் 4, பேட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோா் தலா 2, முகமது ஷமி, கமிண்டு மெண்டிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 155 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஹைதராபாத் தரப்பில் அபிஷேக் சா்மா முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
ஹென்ரிக் கிளாசென் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நிதானமாக ரன்கள் சோ்த்த 3-ஆவது பேட்டா் இஷான் கிஷண் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். அனிகெத் வா்மா 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
முடிவில் கமிண்டு மெண்டிஸ் 3 பவுண்டரிகளுடன் 32, நிதீஷ்குமாா் ரெட்டி 2 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை பௌலிங்கில் நூா் அகமது 2, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.