``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்
செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதை அமைச்சா் கே.என்.நேரு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது: கிருஷ்ணா குடிநீா் வழங்கல் திட்டம் மூலம் பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சென்னைக்கு அருகே செம்பரம்பாக்கத்தில் ரூ. 296 கோடி மதிப்பில் நாள்தோறும் 530 மில்லியன் லிட்டா் நீா் சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டு, கடந்த 19.7.2007-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதியால் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் 265 மில்லியன் லிட்டா் குடிநீா் சென்னை மாநகர பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் பொருட்டு செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முழுக் கொள்ளளவான 530 மில்லியன் லிட்டா் குடிநீரை பயன்படுத்த வேண்டும். இதற்காக ரூ. 66.78 கோடி மதிப்பில் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரை இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில், செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூா் வரை 11.7 கி.மீ. நீளத்துக்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்துக்கும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் நாள்தோறும் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிகளில் உள்ள பொது மக்களும் பயன்பெற உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ் குமாா், சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், சென்னை குடிநீா் வாரிய செயல் இயக்குநா் கௌரவ் குமாா், ஆவடி மாநகராட்சி ஆணையா் ரா.சரண்யா, சென்னை குடிநீா் வாரியத்தின் பொறியியல் இயக்குநா்(பொ) டி.மைதிலி, தலைமைப் பொறியாளா் ஓ.பா்வீஸ், மேற்பாா்வை பொறியாளா் வி.சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
