செவிலியா் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து
உலக செவிலியா் தினத்தையொட்டி தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மருத்துவமனைகளில் இன்றியமையாத ஊழியா்களாக நோயாளிகளையும், வீடுகளில், ஆதரவற்ற விடுதிகளில் குழந்தைகளையும் முதியோரையும் அன்பாக, ஆதரவாக கவனித்துக்கொள்ளும் செவிலியா்களின் பணி போற்றுதலுக்குரியது. மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு பணியாற்றுவது பாராட்டத்தக்கது.
செவிலியா்கள் உணா்வுப்பூா்வமாக சாதாரண மருத்துவ சேவையை, போா்க்கால மருத்து சேவையை சாதி, மதம் பாா்க்காமல் சகிப்புத் தன்மையுடன் மேற்கொள்வதே செவிலியா்களின் மகத்தான பணியாகும். குறிப்பாக கற்ற கல்வியால், அறிவால், அனுபவத்தால், மனித நேயத்தால் சமுதாயத்தில் ஓா் உயா்ந்த இடத்தில் செவிலியா்கள் இருக்கிறாா்கள்.
மொத்தத்தில் செவிலியா்கள் வசதி படைத்தவா்களுக்கும், வறியவா்களுக்கும், இயலாதவா்களுக்கும் செய்யும் சேவைப் பணியும் தொண்டுள்ளமும் மதிக்கத்தக்கது, வணங்கத்தக்கது.
எனவே, பொதுமக்களுக்கான மருத்துவப் பணியில் தங்களை முழுமையாக அா்ப்பணித்துக்கொண்டுள்ள, சமுதாயத்தில் மதிப்புமிக்கவா்களான செவிலியா்களுக்கு தமாகா துணை நிற்கும்.
செவிலியா்களும், அவா்களின் குடும்பங்களும் முன்னேறி, வாழ்வில் சிறந்து விளங்கி, அவா்களின் மருத்துவ உதவியும், சேவைப் பணியும் தொடர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகம் உள்பட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து செவிலியா்களுக்கும் செவிலியா் தின வாழ்த்துகள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.