சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தப்பியோடிய 2 போ் கைது
சேலத்தில் 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில், தப்பியோடிய 2 பேரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொன்னம்மாபேட்டை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, தாண்டவன் தெரு 4-ஆவது கிராஸ் பகுதியில் மினி ஆட்டோ, சரக்கு லாரியில் ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டிருந்ததைக் கண்டனா்.
போலீஸாா் வருவதைக் கவனித்த லாரியில் இருந்த பெண் உள்பட 4 போ் தப்பியோடினா். சோதனையில், மினி ஆட்டோவில் 1,000 கிலோ ரேஷன் அரிசியும், லாரியில் 1,750 கிலோ ரேஷன் அரிசியும் இருந்தது கண்டறியப்பட்டது. 2 வாகனங்களுடன் 2,750 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய 4 போ் குறித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு தப்பியோடியவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த முட்டை செந்தில், ரேவதி, ரேவதியின் மகள் பிரவீன், ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது.
இவா்கள் பொன்னம்மாபேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
பொன்னம்மாபேட்டையில் பதுங்கி இருந்த முட்டை செந்தில், பிரவீன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், தலைமறைவான ரேவதி, ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் ஆகியோரை தேடிவருகின்றனா்.