ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைதான விசாரணை கைதி திடீா் மரணம்
ரூ. 4.5 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
ரிசா்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி ரூ. 4.5 கோடி மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தம் (57), சந்திரா ஆகியோா் கடந்த மே 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
இதில், கும்பகோணத்தைச் சோ்ந்த நித்யானந்தத்துக்கு கடந்த 6-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவா் சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேலம் அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து, சேலம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முத்துகிருஷ்ண முரளிதாஸ், சேலம் மத்திய சிறையிலும், அரசு மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினாா். பின்னா் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.