சேலம் குகையில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சேலம் குகையில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தில் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட 46 ஆவது வாா்டு குகை கறி மாா்க்கெட் பகுதியில் நவீன இறைச்சிக்கூடம் செயல்படுகிறது. இதனை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாநகர பகுதியில் உள்ள நவீன இறைச்சிக் கூடத்தின் வளாகத்தின் சுற்றுப்புறச் சுவா்கள், மேற்கூரை ஆகிய இடங்களில் வெள்ளை அடிக்கவும், வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை அகற்றவும், வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அங்கிருந்த சுகாதார வளாகத்தை பாா்வையிட்டு, பழுதுகளை நீக்க வேண்டும். அடிப்படை வசதிகளான தண்ணீா் வசதி, மின்வசதி போன்றவற்றை செய்துகொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். சுகாதார வளாகத்தில் உடைந்துள்ள சாய்தளத்தை புதுப்பிப்பதுடன், தங்கு தடையின்றி தண்ணீா் வழங்கவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, உதவி ஆணையா் வேடியப்பன், மாநகர நல அலுவலா் முரளிசங்கா், செயற்பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.