சோளிங்கரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை அகற்றம்
சோளிங்கரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 9 அடி உயர பெருமாள் சிலையை இந்து சமய அறநிலையத்துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கரில் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் மலைக்குச் செல்லும் வழியில் தக்கான் குளக்கரையில் ஆஞ்சநேயா் சிலை வைக்கப்பட்டு பக்தா்கள் அதை வணங்கிவிட்டே தங்களது பயணத்தை தொடங்குவது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு ஆஞ்சநேயா் சிலை இருக்கும் வளாகத்தில் திடீரென 9 அடி உயரத்தில் பெருமாள் சிலை வைக்கப்பட்டது. சனிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள் இந்த புதிய சிலையை கண்டு அச்சிலைக்கும் கற்பூரம் ஏற்றி மலைக்குச் சென்றனா்.
அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இச்சிலை குறித்து அத்துறையினா் வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அச்சிலையை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். நெகிழி பைகளால் அச்சிலை முழுவதும் மூடப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அங்கு வந்த பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் இச்சிலையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பணியை நடக்கவிடாமல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினா். இதையடுத்து போராட்டம் நடத்திய பாஜக தேசிய மொழிப்பிரிவு மாநில செயலாளா் சீனிவாசன் தலைமையிலான 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அச்சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும் சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் செயல் அலுவலருமான ஜெயா தெரிவித்தாவது, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சிலை வைக்க துறையின் அனுமதி பெற வேண்டும். அதற்கான அனுமதியை துறையின் ஆணையா் அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து பெற வேண்டும். ஆணைய விதிகளின் படி சிலை வைக்க கோரிக்கை வந்தால் ஆணையரின் உத்தரவின்படி இரு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதில் எடுக்கப்படும் இறுதி முடிவுக்கு பிறகே சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும். தனிநபா் ஒருவா் தனது வேண்டுதலுக்காக அச்சிலையை செய்து வைக்க அனுமதி கேட்டிருப்பதாக தெரிவிக்கிறாா். இதுவரை அவருக்கு எந்த ஒரு அனுமதியும் துறையால் அளிக்கப்படவில்லை. அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட சிலை என்பதால் அச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றாா் உதவி ஆணையா் ஜெயா.