சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை
சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினா் டி.கோபால் கோரிக்கை விடுத்தாா்.
சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்வி அசோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையா் நந்தினி, மன்றத் துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோருடன் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். கூட்டத்தில் 7-ஆவது வாா்டு உறுப்பினா் மோகனா சண்முகம் 4 ஆண்டுகளாக தனது வாா்டில் ஒரு பணி கூட நடைபெறவில்லை எனக்கூறி திடீரென தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.
தொடா்ந்து இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
’’டி.கோபால் (காங்கிரஸ்): சோளிங்கா் நகராட்சிக்கு குடிநீா் வழங்க 48 கோடி மதிப்பில் பொன்னையாற்றில் மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்க தொடா்ந்த பணியை விரைவுபடுத்த வேண்டும். ரூ. 1.40 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகராட்சி நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
ஆஞ்சநேயன்((சுயே): மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பில்லாஞ்சி பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா் வார வேண்டும். பில்லாஞ்சி பகுதியில் பொன்னை ஆற்றுக்குடிநீா் விநியோகம் சீராக வழங்கப்படுவதில்லை. முதை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் நகா்மன்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
தமிழ்செல்விஅசோகன் (தலைவா்): உறுப்பினா்கள் அனைவரது கோரிக்கைகளில் பல தற்போதே நடவடிக்கையில் உள்ளன. அவை விரைவுபடுத்தப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.