சோழபுரத்தில் இடையூறின்றி செயல்பட சாலையோர வியாபாரிகள் முடிவு
தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது.
சோழபுரம் பேரூராட்சிப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் சாலையோர தரைக்கடைகள், தள்ளுவண்டிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் அவைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிப்பு வழங்கினா்.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா்.
இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் கமலா செல்வமணி தலைமையில், செயல் அலுவலா் முரளி முன்னிலையில் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளா் நாசா், சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் டி.செல்வமணி, விசிக செயலா் நா.கரிகாலன், இளம் விவசாயிகள் சங்கம் சாா்பில் த. ஜில்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் கடைகள் வைத்து வியாபாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனா்.