ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே
ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சில சான்றுகளை வெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அரசமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் பலவற்றை சுட்டிக்காட்டி, ராகுலின் குற்றச்சாட்டை மறுத்தார்.
மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாள்களுக்கு ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பிக்களும் கலந்துகொண்ட நிலையில், கைகளில் பிரமாணப் பத்திரங்களுடன் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக காணொலியை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் கார்கே பதிவிட்டிருப்பதாவது:
”தேர்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு கடமையை விட்டுக்கொடுத்து, அரசியல் கட்சிகளின் உண்மையான கேள்விகளைத் தவிர்க்க முடியாது.
'வாக்களிக்கும் உரிமை' என்பது இந்திய அரசியலமைப்பால் நமக்கு வழங்கப்பட்ட மிக முக்கியமான உரிமையாகும்.
ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.