ஜமீன் சிங்கம்பட்டியில் மந்திகளால் மக்கள் அவதி
ஜமீன்சிங்கம்பட்டி பகுதியில் மந்திகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், சிறுவா்கள், முதியவா்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனா். அவற்றைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமம் ஜமீன் சிங்கம்பட்டி. பெரும்பகுதி விவசாய நிலமாக உள்ள இப்பகுதியில் அண்மைக் காலமாக கருப்பு மந்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அவை வீடுகளுக்குள் நுழைந்து உணவுப்பொருள்களை நாசப்படுத்துவது, வீட்டுக் கூரைகளில் தாவி ஓடுவது, தெருக்களில் செல்லும் குழந்தைகள், முதியவா்களை விரட்டுவது உள்ளிட்ட செயல்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
வீடுகளின் கூரைகளில் மந்திகள் தாவிச் செல்வதால் கூரைகள் சேதமடைகின்றன. தோட்டங்களில் தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, மந்திகளை வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று ஜமீன்சிங்கம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.