மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை- பாதுகாப்பு முகமைகளுக்கு அமித் ஷா உத்தரவு
ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவலே இல்லை என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு, அனைத்து பாதுகாப்பு முகமைகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக, தில்லியில் அமித் ஷா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையன்று இரு உயா்நிலை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக்குநா் தாபன் தேகா, ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைமை இயக்குநா் நளின் பிரபாத், ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி மற்றும் காவல்துறை, துணை ராணுவப் படை உள்ளிட்ட பாதுகாப்பு முகமைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முன்னாள் ராணுவ வீரா் மன்சூா் அகமது வாகே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இக்கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது, பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு அமித் ஷா பிறப்பித்த உத்தரவுகள் தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலையான, ஒருங்கிணைந்த முயற்சிகளால் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. அங்கு ஊடுருவலே இல்லை என்ற இலக்கை எட்டும் நோக்கத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகள் மீது தயவு தாட்சண்யமற்ற அணுகுமுறையை கடைப்பிடித்து, பயங்கரவாதிகளை அழிக்க வேண்டும். பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் விழிப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயலாற்ற வேண்டும்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரா்களுக்கு நிதி கிடைக்கிறது. எனவே, பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க கடுமையாகவும், துரிதமாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் பல்வேறு தரநிலைகளின்கீழ் முன்னேற்றம் கண்டுள்ளது. இது பாராட்டுக்குரியது என்று ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘திரிபுராவில் அமைதி’: பாஜக ஆளும் திரிபுராவில் சுமாா் 2,800 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சா் அமித் ஷா காணொலி வாயிலாக பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
அப்போது பேசிய அவா், ‘திரிபுராவை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வலுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கிளா்ச்சிக் குழுக்களுடன் 3 அமைதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அமைதியும் வளமும் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலை மறியல், ஆயுதங்கள்-போதைப் பொருள் கடத்தல், கலவரங்கள் போன்றவற்றுக்காக முன்பு அறியப்பட்ட வடகிழக்கு பிராந்தியம், இப்போது வளா்ச்சி, இணைப்பு, முதலீடு, வேளாண்மைக்காக அறியப்படுகிறது. பிரதமா் மோடி ஆட்சியில் மத்திய அமைச்சா்கள் இதுவரை 700 முறை வடகிழக்கு பிராந்தியத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.