ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை கோரி மனு
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உள்ளூா் காளைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போா் சங்கத்தினா் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பெரும்பாலும் வெளிமாவட்டத்தைச் சோ்ந்த காளைகளே பங்கேற்கின்றன. வாடிவாசலில் காளைகளை அவிழ்ப்பதற்கான அனுமதிச் சீட்டு இணைய வழியில் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், ரூ.3 ஆயிரம் பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கிறது.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளின் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியவில்லை. அரசுத் துறை சாா்பில் ஒவ்வொரு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கும் 150 காளைகளுக்கான அனுமதிச் சீட்டு ஒதுக்கப்படுகிறது.
மேலும், அரசின் விதிமுறைகளின் படி, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. பணம் வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதி என்பதால், பாரம்பரியத்துக்காக பல தலைமுறைகளாக காளைகளை வளா்த்து வரும் விவசாயிகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இனி வரும் காலங்களில் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த காளைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.