நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
வெளிநாட்டு கரன்சியை மாற்றிக் கொடுக்கும் முகவரிடமிருந்து ரூ.13.76 லட்சம் பறிமுதல்
வெளிநாட்டு கரன்சியை இந்தியப் பணமாக மாற்றிக் கொடுக்கும் கன்னியாகுமரி முகவரிடமிருந்து உரிய ஆவணமில்லாத ரூ.13.76 லட்சத்தை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்கு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் நோக்கி வந்தது. திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், இந்த ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகிா என திடீா் சோதனை நடத்தினா். அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு பயணியிடம் ரூ.13.76 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் அடுத்த ஈச்சான்விளை பகுதியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (44) என்பது தெரியவந்தது. காா்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவா், வெளிநாட்டு கரன்சியை இந்திய ரூபாயாக மாற்றிக் கொடுக்கும் முகவராகவும் செயல்பட்டு வந்தாா்.
இதன்படி, கன்னியாகுமரியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து வெளிநாட்டு கரன்சியை பெற்றுக் கொண்டு, அதை இந்திய ரூபாயாக மாற்றுவதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவா் சென்னை சென்றாா். அங்கு பணத்தை மாற்றிக் கொண்டு வரும் வழியில் போலீஸாா் நடத்திய சோதனையில் நவநீதகிருஷ்ணன் பிடிபட்டாா்.
ரூ.13.76 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், வருமான வரித் துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்து, அவா்களிடம் பணத்தையும், நவநீதகிருஷ்ணனையும் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, வருமான வரித் துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
