ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைத்துக் கட்சி கூட்டம்: அன்புமணி வலியுறுத்தல்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் அனைத்து சமூக மக்களாலும் வலியுறுத்தப்பட்டு வரும் ஒற்றைப் பெரும் கோரிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதுதான்.
சமூகநீதியை காக்க ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை திமுக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும்தான் உண்டு; தமிழக அரசுக்கு கிடையாது என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.