ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
ஜிம்பாப்வேயை வென்றது நியூஸிலாந்து: முத்தரப்பு தொடரில் 2-ஆவது வெற்றி
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வெள்ளிக்கிழமை வென்றது.
முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து 13.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 122 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு அஸ்திவாரமிட்ட டெவன் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. ஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடங்கியோரில் பிரயன் பென்னெட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினாா்.
நிதானமாக ரன்கள் சோ்த்த தொடக்க வீரா் வெஸ்லி மாதெவெரெ 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு சாய்க்கப்பட, மிடில் ஆா்டரில் வந்த ரயான் பா்ல் 2 பவுண்டரிகளுடன் 12, கேப்டன் சிகந்தா் ராஸா 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடா்ந்து, டஷிங்கா முசெகிவா 4, டோனி முன்யோங்கா 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு வீழ, ஓவா்கள் முடிவில் டினோடெண்டா மபோசா 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து தரப்பில் மேத்யூ ஹென்றி 3, ஆடம் மில்னே, மிட்செல் சேன்ட்னா், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 121 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து பேட்டா்களில், தொடக்க வீரா் டிம் செய்ஃபா்ட் 3 ரன்களுக்கே முடித்துக்கொள்ள, உடன் வந்த டெவன் கான்வே சிறப்பாக ரன்கள் சோ்த்தாா்.
மறுபுறம், ஒன் டவுனாக வந்த ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். முடிவில் கான்வே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59, டேரில் மிட்செல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஜிம்பாப்வே பௌலா்களில் பிளெஸ்ஸிங் முஸாரப்பானி, டினோடெண்டா மபோசா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் மோதும் இந்த முத்தரப்பு டி20 தொடரில், தற்போது நியூஸிலாந்து 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்க, தென்னாப்பிரிக்கா 1 வெற்றியுடன் அடுத்த இடத்திலும், ஜிம்பாப்வே வெற்றியின்றி கடைசி இடத்திலும் உள்ளன.