‘ஜூன் வரை பேருந்து பயண அட்டையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தலாம்’
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை மாா்ச் 31- ஆம் தேதி வரை செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையில், பேருந்து பயண அட்டைகளின் மூலமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் மூலம் உடனுக்குடன் பெறும் வசதியை அனைத்துப் போக்குவரத்து கழகங்களிலும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், ஏற்கெனவே பயனாளிகள் பயன்படுத்திவரும் கட்டணமில்லா பயண அட்டைகள் மூலமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.