வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ஜூலை 14 முதல் தொடா் வேலை நிறுத்தம்: கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கம் முடிவு!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ரேஷன் கடைகளில் தற்போது புளுடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு மட்டும் 8 நிமிஷங்களிருந்து 10 நிமிஷங்கள் ஆகின்றன.
இதனால் நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பொருள்கள் விநியோகம் செய்ய முடிகிறது. இந்தக் கால தாமதத்தால் பொதுமக்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன. இதை தவிா்க்க புளுடூத் முறையை நீக்க வேண்டும்.
நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகா்வு செய்யப்படும் பொருள்களில் எடை குறைவு ஏற்படுவதைத் தவிா்க்க, சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் 40 சதவீத பெண்களும், 5 சதவீத மாற்றுத்திறனாளிகளும் பணியாற்றுவதால், ரேஷன் கடைகளில் உள்ளவா்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, எடையாளா் ஒருவரை அனுமதிக்க வேண்டும்.
அதுவரை வெளிப்பணி மூலம் உதவியாளா் ஒருவரை பணியமா்த்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 200 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், அதனுடன் இணைந்த 35 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் முழு அளவில் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் எம். மணிவண்ணன் தலைமை வகித்தாா். மாநில கௌரவ பொதுச் செயலா் சி. குப்புசாமி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ்.என். பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலா் டி. கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.