ஜெ.பி.நட்டா அக்.6-இல் சென்னை வருகை: நயினாா் நாகேந்திரன்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா சென்னைக்கு அக்.6-ஆம் தேதி வருகை தரவுள்ளாா் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் மத்திய அரசு இலவசமாக தருபவை. அதில் மாநில அரசின் பங்கு இல்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 மத்திய அரசு வழங்குகிறது.
பிரதமா் மோடி அரசின் வீடு கட்டும் திட்டத்தில்தான் மாநில அரசின் பங்கு இருக்கிறது. முதலில் 37 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசுக்கு பெயா் வந்துவிடக் கூடாது என்பதற்காக, இப்போது கட்டுப்பாட்டில் வைத்து, அதை 19 லட்சமாக குறைத்திருக்கின்றனா். இது தமிழா்களுக்கு, தமிழக அரசு செய்யும் மிகப் பெரிய துரோகம்.
ஜிஎஸ்டியில் மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு என்று எதுவுமே கிடையாது. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதியமைச்சா்களும் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களின் ஒப்புதலோடுதான் வரிவிதிப்பு கொண்டு வரப்படுகிறது. மக்களுக்கு சுமை அதிகமாகிறது என்று பல்வேறு தரப்பினரிடம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 28 சதவீத வரி விலக்கிக்கொள்ளப்பட்டது. 12 சதவீதத்தில் இருந்த ஏறத்தாழ 90 பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சில பொருள்களுக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு நன்மை இருக்கிா? இல்லையா? என்பதை முதல்வா் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டியில் 50 சதவீதம் மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது. மீதி இருப்பதில்தான் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் அனைத்துப் பொருள்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆவினில் பால் பொருள்களின் விலையை தமிழக அரசு தானாகக் குறைக்கவில்லை. போராட்ட அறிவிப்பை வெளியிட்டவுடன் விலையைக் குறைத்தாா்கள். திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டா வருகிற அக்.6-ஆம் தேதி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வருகிறாா். அதன் பின்னா், புதுச்சேரி சென்று அங்கிருந்து புதுதில்லி செல்கிறாா் என்றாா் நயினாா் நாகேந்திரன்.