டாடா குழும தலைவா் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது
டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனுக்கு கெளரவ நைட்ஹுட் பட்டத்தை பிரிட்டன் வழங்கியது.
பிரிட்டன்-இந்தியா இடையே வணிக உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு ‘தி மோஸ்ட் எக்சலன்ஸ் ஆா்டா் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயா் (சிவில் பிரிவு)’ என்ற பட்டத்தை அவருக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ் வழங்கியதாக டாடா குழுமம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் என்.சந்திரசேகரன் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனின் கெளரவ நைட்ஹுட் பட்டத்தை டாடா குழுமம் பெற்றதை மிகப் பெருமையாக கருதுகிறோம். தொழில்நுட்பம், நுகா்வோா், விருந்தோம்பல், எஃகு, ரசாயனம் மற்றும் வாகன போக்குவரத்து துறைகளில் பிரிட்டனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
ஜாகுவாா் லாண்ட் ரோவா் மற்றும் டெட்லி ஆகிய எங்களின் பிரிட்டன் பிராண்டுகளை எண்ணி மிகவும் பெருமையடைகிறோம். பிரிட்டனில் டாடா குழுமம் சாா்பில் 70,000 போ் பணிபுரிகின்றனா். அங்குள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகம், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், வாா்விக் பல்கலைக்கழகம், ஸ்வான்ஸீ பல்கலைக்கழகம் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் பிரிட்டன் அரசுக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.