டாஸ்மாக் ரெய்டு: `திங்கள் பதில் வேண்டும்; அதுவரை நடவடிக்கை கூடாது’ - EDக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதில், `தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரூ.1000 கோடி ஊழல்?
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளது’’ என்று கூறியிருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை, இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், `மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் சார்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்திரி ஆஜராகி வாதிட்டார். அவரது வாதம் பின்வருமாறு:-
``டாஸ்மாக் மாநில அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோதனை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குநர், துணை இயக்குநர் பதவிக்கு குறையாத நபர்கள் தான் செல்ல முடியும். அல்லது இயக்குநர் அங்கீகரித்த அதிகாரிகள்தான் சோதனை செய்ய முடியும். அதற்கு முன்பு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும். அங்கு சட்டவிரோத பணமோ அல்லது அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களோ உள்ளது என்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.” என்றவர், மேலும்,

``3 நாட்கள் சோதனை நடந்துள்ளது. பெண் ஊழியர்களை 3 நாட்களும் நடு இரவு வரை பிடித்து வைத்திருந்தனர். பெண் ஊழியரை நடு இரவு 1 மணிக்கு வெளியில் அனுப்பி விட்டு, காலை 8 மணிக்குள் வந்து விட வேண்டும் என்று கொடுமை செய்துள்ளனர். ஆண் ஊழியர்களை விடவே இல்லை. ஆவணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். சுமார் 60 மணி நேரம் இந்த சோதனை நடந்துள்ளது. பண பரிவர்த்தனையில் என்ன சட்டவிரோதம் நடந்தது என்பதை கூறவில்லை.” என்றார்.
நீதிபதிகள்: ``ஒட்டுமொத்த அலுவலகத்தையும் 3 நாட்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா? இந்த 3 நாட்கள் நடந்த சோதனையின்போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளதா? ஏன் திடீரென அலுவலகத்துக்குள் நோட்டீஸ் இல்லாமல் சோதனை செய்தீர்கள்?”
சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன்: `அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.’
நீதிபதிகள்: ``மும்பை ஐகோர்ட்டு எப்போது சோதனை செய்ய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளது. இரவில் சோதனை செய்ய முடியாது. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதற்காக 3 நாட்கள் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் வெளியில் விடவில்லை. விரிவான பதில் மனுவை வருகிற திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்.”
அட்வகேட் ஜெனரல்: `எங்களிடம் கண்காணிப்பு கேமரா பதிவு முழுவதும் உள்ளது.’
மூத்த வக்கீல் விக்ரம் சவுத்திரி: `மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.’
நீதிபதிகள்: ``இந்த வழக்கை திங்கட்கிழமை தள்ளிவைக்கிறோம். அப்போது, அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதில் குற்றச்சாட்டுக்கான எப்.ஐ.ஆர்கள், வழக்கு குற்றச்சாட்டு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டும். அதுவரை இந்த வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கவேண்டும். விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிக்கிறோம்.” என்றனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play