டி20 தொடா்: வங்கதேசத்துக்கு முழுமையான வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை, அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
கடைசி ஆட்டத்தில், முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் சோ்த்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 16.4 ஓவா்களில் 109 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதிகபட்சமாக ஜாகா் அலி 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 72 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரொமேரியோ ஷெப்பா்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.
அடுத்து, 190 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரொமேரியோ ஷெப்பா்ட் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும். வங்கதேச பௌலிங்கில் ரிஷத் ஹுசைன் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
வங்கதேசத்தின் ஜாகா் அலி ஆட்டநாயகன் ஆக, அதே அணியின் மெஹெதி ஹசன் தொடா்நாயகன் விருது பெற்றாா். அவா் 37 ரன்கள் அடித்ததுடன், 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினாா்.