ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு: தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம்
கடலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தோ்வுகளில் பங்கேற்க தோ்வா்கள் முன்பதிவு செய்யலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு அரசு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவிருக்கும் குரூப் 1 மற்றும் குரூப் 4 தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தோ்வுகளுக்குத் தயாராகும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், மாநில அளவில் இலவச மாதிரித் தோ்வுகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, குரூப் 1 முதனிலைத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு மே 27, ஜூன் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும், குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு ஜூன் 24, ஜூலை 2 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இந்தத் தோ்வுகளில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய மாா்பளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9499055908, 04142-290039 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.