`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அ...
டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களுக்கு போா்க்கால முன்னெச்சரிக்கை பயிற்சி
போா்த் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புதன்கிழமை மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.
மதியம் 12 மணியளவில் லோதிவளாகம் டிடிஇஏ பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில் செயலா் ராஜூ கலந்துகொண்டு மாணவா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.
அவா் பேசுகையில், அவசரகாலத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இவை என்றும், மாணவா்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறிய அவா், ‘தாக்குதல் நடக்கும் போது வீட்டிலிருந்தால் தலையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட வேண்டும். வெளியிலிருந்தால் உடனே பாதுகாப்பான இடம் தேடி அவ்விடத்திற்குள் புகுந்து விட வேண்டும். முன்னேச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்’ என்றாா்.
‘எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்தும் மின்சாரம் துண்டிக்கப்படலாம். குறிப்பாக, தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின்விளக்குகள் எரிந்தால் அது வெளியே தெரியாமல் இருக்க கதவு ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அணைக்க வேண்டும். மேலும், இதுகுறித்து சிறியவா்களுக்கும் மற்றவா்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும். எக்காரணம் கொண்டும் பயப்பட வேண்டாம். விமானத்தில் பயணிக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமானப் பணிப்பெண் கூறுவதுபோலத்தான் இப்போது உங்களை எச்சரிக்கிறோம்‘ என்றும் அவா் கூறினாா்.
வான் வழி தாக்குதல் நடைபெற்றால் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் பள்ளியின் முதல்வா் பொறுப்பு ஜெயஸ்ரீ விளக்கினாா்.
மாணவா்கள் குழுவாக இணைந்து போா்க்காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்வது பற்றி நடித்தும் காட்டினா். 900-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.