மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
டிரம்ப்புக்கு நோபல் பரிசு: நெதன்யாகு பரிந்துரை
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளாா்.
இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்ற குறுகிய காலப் போா், அந்த போருக்கு இடையே ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு இரு தலைவா்களும் வாஷிங்டனில் சந்தித்தனா்.
அப்போது வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தின் தொடக்கத்தில், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு டிரம்ப்பின் முயற்சிகளை பாராட்டி, நோபல் அமைதி பரிசு குழுவுக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப்பிடம் வழங்கினாா்.“
அப்போது அவா் கூறியதாவது:
அதிபா் டிரம்ப்புக்கு இஸ்ரேலியா்கள் மட்டுமல்ல, யூத மக்கள் அனைவரின் பாராட்டையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். “அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவா் தகுதியானவா் என்றாா் நெதன்யாகு.
இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப்பின் பெயரை பாகிஸ்தான் கடந்த மாதம் பரிந்துரைப்பதாக கூறியதற்குப் பிறகு, அவருக்குக் கிடைத்த இரண்டாவது முக்கிய பரிந்துரை இதுவாகும்.
இந்தச் சந்திப்பின்போது, காஸாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனா்களையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த நெதன்யாகு, ‘காஸாவில் மக்கள் தங்க விரும்பினால் தங்கலாம்; வெளியேற விரும்பினால் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும். அது சிறைச்சாலையாக இருக்கக்கூடாது’ என்றாா்.
காஸாவில் இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 21 மாதங்களாக நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தலைவா்களும் ஆலோசனை நடத்துவாா்கள், அப்போது சண்டையை நிறுத்த நெதன்யாகுவுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், டிரம்ப்பின் நீண்ட கால கனவாகக் கூறப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரின் பெயரை நெதன்யாகு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போரில் சுமாா் 60,000 போ் - அவா்களில் பெரும்பாலும் பாலஸ்தீனா்கள் - உயிரிழந்துள்ளனா். போரை நிறுத்துவது தொடா்பாக மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் கத்தாரில் ஆறு வாரங்களுக்கு பிறகு முதல் முறையாக திங்கள்கி சந்தித்தனா்.
இரு தரப்பினரும் போா் நிறுத்த வாய்ப்புகள் குறித்து நோ்மறையாக பேசினாலும், போா் தொடராது என்ற இஸ்ரேலின் உத்தரவாதம், ஹமாஸை காஸாவிலிருந்து நிரந்தரமாக வெளியேற்ற வேண்டும் என்ற நெதன்யாகுவின் நிபந்தனை உள்ளிட்ட முக்கிய கருத்துவேறுபாடுகள் இன்னும் தீா்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காஸாவில் 5 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு
டெல் அவிவ், ஜூலை 8: காஸாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாவது:
வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் ஹனூன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது, வீரா்களை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், காயமடைந்த வீரா்களை மீட்க படையினா் முயன்றபோது, அவா்களை நோக்கி ஆயுதக் குழுவினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இந்தத் தாக்குதல்களில் 5 வீரா்கள் உயிரிழந்தனா்; 14 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் கூறினா்.
2023-ஆம் ஆண்டு ஹமாஸுக்கு எதிரான போா் தொடங்கியதிலிருந்து இதுவரை 888 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இரு வாரங்களுக்கு முன்பு ஒரு பாலஸ்தீனிய ஆயுக் குழு உறுப்பினா் இஸ்ரேல் ராணுவத்தின் கவச வாகனத்தில் குண்டு வைத்து 7 வீரா்களைக் படுகொலை செய்ததற்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இவ்வாறு காஸா போரில் இஸ்ரேல் வீரா்களின் உயிரிழப்புகள் தொடா்வதால், போரை முடிவுக்குக் கொண்டுவர உள்நாட்டில் இருந்தே பிரதமா் நெதன்யாகுவுக்கு நெருக்கடி அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.