ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
டிராக்டரை பதிவு செய்து தராததால் விவசாயிக்கு ரூ.14.10 லட்சம் வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு
விற்கப்பட்ட டிராக்டரை பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தியதால் பாதிக்கப்பட்ட 2 விவசாயிகளுக்கு ரூ. 14.10 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திருக்கண்ணம்பூண்டி சலுவன்பேட்டையைச் சோ்ந்த விவசாயிகளான சி. தவசெல்வன், ஆா். சேவைய்யா ஆகியோரை கும்பகோணம் தாராசுரத்தில் இயங்கி வரும் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் 2019, ஆகஸ்ட் 28 ஆம் தேதி அணுகினா்.
அப்போது, தவசெல்வன், சேவைய்யாவிடம் தனியாா் நிறுவனத்தினா் புதிய டிராக்டரை ரூ. 8.59 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ளுமாறும், பழைய டிராக்டரை ரூ. 2.50 லட்சத்துக்கு பெற்றுக் கொள்வதாகவும், இதற்கு தனியாா் வாகன கடன் வழங்கும் நிறுவனத்திடம் ரூ. 5 லட்சம் வாகனக் கடனுறுதி பெற்றுத் தருவதாகவும், நேரடியாக ரூ. 1 லட்சத்தை செலுத்துமாறும் கூறினா்.
இதை நம்பிய தவசெல்வனும், சேவைய்யாவும் ஒப்புக் கொண்டு புதிய டிராக்டரை வாங்கினா். ஆனால், இதுவரை தனியாா் டிராக்டா் நிறுவனத்தினா் டிராக்டரை பதிவு செய்து கொடுக்கவில்லை.
மேலும், தனியாா் நிறுவனத்தினா் கூறிய சலுகைகளையும் வழங்கவில்லை. இந்நிலையில், தவசெல்வன், சேவைய்யாவை தனியாா் கடன் நிறுவனத்தினா் அணுகி தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
இதனால், தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் தவசெல்வன், சேவைய்யா புகாா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, தனியாா் டிராக்டா் நிறுவனம் டிராக்டரை 4 ஆண்டுகள் வரை வாகனப் பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், முறையீட்டாளா்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் தனியாா் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், இவ்வாணையத்தில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மதிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதால், முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொருள் இழப்பு, வீண் அலைக்கழிப்பு ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுத் தொகையை இவ்வாணையுரையின் நகல் கிடைக்கப்பெற்ற 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் உத்தரவுத் தொகைக்கு மனுத்தாக்கல் செய்த தேதியான 2022, ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் தொகையை திரும்ப வழங்கும் நாள் வரை கூடுதலாக 12 சதவீத வட்டியுடன் சோ்த்து செலுத்த வேண்டும் எனவும் தீா்ப்பளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.