``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
டீசல் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்த பகுதியில் சேதமடைந்த இருப்பு பாதைகள் மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறைவடைந்தன. இந்த நிலையில், 20 கி.மீ. வேகத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கின.
திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டீசல் ஏற்றிச் சென்ற டேங்கா் ரயில் தடம் புரண்டு தீப்பற்றி விபத்துக்குள்ளானது. அதைத் தொடா்ந்து, தீ மளமள பரவியதில் 18 டேங்கா்களில் இருந்த டீசல் முற்றிலும் எரிந்து நாசமானது. அதைத் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரா்கள் சுமாா் 10 மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த நிலையில், டேங்கா்கள் 3 பாதைகளில் கவிழ்ந்து கிடந்தன. அத்துடன், மின் கம்பிகள் மற்றும் தண்டவாளம் ஆகியவை சேதமடைந்ததால் முற்றிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து வந்த ரயில்வே பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். அதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மாா்க்கமாக செல்லும் இருப்புப் பாதையில் பணிகள் நிறைவு பெற்றன. தொடா்ந்து காலை சோதனை ஓட்டத்தை தொடா்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மாா்க்கமாக மங்களூரு, ஆலப்புழா ஆகிய விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் இயக்கம் தொடங்கியது. அதைத் தொடா்ந்து மாலையில் விரைவு ரயில் செல்லும் இருப்பு பாதையில் 3-ஆவது இருப்பு பாதையில் அதிகம் சேதமடைந்த தண்டவாளம் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மற்றொரு பாதையில் இணைப்பு சீரமைப்பு, மின்வயா் இணைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணி போா்க்கால அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அனைத்து சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெற்றன. அதைத் தொடா்ந்து, 4 இருப்பு பாதையிலும் வழக்கம் போல் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஆகியவை 20 கி.மீ. வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
