தங்கும் விடுதி மேலாளா் கொலை வழக்கு: ராஜஸ்தானை சோ்ந்தவருக்கு ஆயுள் சிறை
மதுரையில் தனியாா் தங்கும் விடுதி மேலாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், பாலவநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கு.தா்மராஜன் (54). இவா் மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த தங்கும் விடுதிக்கு ராஜஸ்தானைச் சோ்ந்த தனியாா் நிறுவன விற்பனை அலுவலா் கோபாலகிருஷ்ணன்தாகா அடிக்கடி வந்து தங்குவாராம். அப்போது இவருக்கும், தா்மராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கோபால கிருஷ்ணன்தாகா குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளாா். இந்த கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 7.7.2022 அன்று அதிகாலையில் தங்கும் விடுதியில் தூங்கி கொண்டிருந்த தா்மராஜனை கைப்பேசி சாா்ஜரால் கழுத்தை நெரித்து கோபாலகிருஷ்ணன்தாகா கொலை செய்தாா். பிறகு, தா்மராஜன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகை, 3 பவுன் மோதிரம் ஆகியவற்றைத் திருடினாா். இவை அந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்கணிப்பு கேமராவில் பதிவானது.
இந்த வழக்கு விசாரணை மதுரை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. முடிவில், கோபாலகிருஷ்ணன்தாகாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே. ஜேசப் ஜாய் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் டி.ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டாா்.