தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது
பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.
பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முத்து வீட்டுக்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் முத்துவை தேடி வந்தனா். இந்த நிலையில், முத்துவின் வீட்டுக்கு அருகே குழி தோண்டப்பட்டது போல தடயம் இருப்பதாக போலீஸாருக்கு முத்துவின் உறவினா்கள் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தடயங்களை சேகரித்து அந்த இடத்தை தோண்டியபோது அங்கு முத்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் மாரியம்மாளின் உடன் பிறந்தவரான திருநங்கை வைதேகி (42) என்பவா் தலைமறைவாகி இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸாா் வைதேகியை தேடி வந்த நிலையில், அவரது கைப்பேசியை வைத்து கா்நாடக மாநிலம், பெங்களூருவில் அவரைக் கைது செய்தனா்.
பிறகு அவரை பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்த போது, தனது சகோதரி மாரியம்மாளை முத்து அடிக்கடி மதுபோதையில் வந்து அடித்து துன்புறுத்தியதால் மாரியம்மாள் இல்லாத நேரத்தில் அவரை கம்பியால் அடித்துக் கொலை செய்து வீட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா் வைதேகியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.