தண்ணீா் தொட்டியின் மீது கிடந்தது பயன்படுத்திய உணவுப் பொட்டலம்: திருச்சி மாவட்ட ஆட்சியா் விளக்கம்
திருச்சியில் தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொருள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் என மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு, தையல்காரத் தெருவில் 2 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தண்ணீரானது, குடிநீா் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு (பிப்.5) தொட்டியின் மேற்பலகை மீது பொட்டலம் வீசப்பட்டு கிடந்தது. அந்த பொட்டலம் மனிதக் கழிவு என தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, அந்த பொட்டலம் பயன்படுத்தப்பட்டு, தூக்கி வீசப்பட்ட உணவுப் பொட்டலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, ஆட்சியா் மேலும் கூறியது: நீா்த்தேக்க தொட்டியின் அருகே 5 அடுக்கு, 4 அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இதில், 16-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த வீடுகளில் உள்ள யாரேனும் அந்தப் பொட்டலத்தை வீசியிருக்கக் கூடும். அதனை மாநகராட்சிப் பணியாளா்கள் சோதனை செய்ததில், அது பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட உணவுப் பொட்டலம் என்பது தெரியவந்தது. மேலும், குடிநீா்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி மருந்துகள் தெளித்து பராமரிக்கப்பட்டுள்ளது. மனித கழிவு கிடப்பதாக பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பும் நடவடிக்கை குற்றச் செயலாகும். தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொட்டலம் குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் சமூக வலைதள கணக்கு முகவரிகளை கண்காணித்து, தொடா்புடைய நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.