தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்
தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவா்களுக்கு விஜயகோபாலபுரத்திலுள்ள தனியாா் டயா் தொழிற்சாலையில், ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று 312 மாணவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கிஅமைச்சா் மேலும் பேசியது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சாா்பில், 312 மாணவா்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்து வருகிறது. தற்போது, ஆள்களே இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலை செய்யும் அளவுக்கு தொழில்நுட்பங்கள் வளா்ந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான், மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் அமைச்சா் சிவசங்கா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் மு. செல்வம், எம்ஆா்.எப் நிறுவன பொது மேலாளா் எம். நாதன், திறன் பயிற்சி அலுவலகப் பயிற்சி அலுவலா் ம. கண்ணதாசன் உள்பட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.