'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
தனியாா் பள்ளி பேருந்துகளின் தரம்: ஆட்சியா் ஆய்வு!
தென்காசி மாவட்ட தனியாா் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட தனியாா் பள்ளி வாகனங்களின் தரம் குறித்த வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனியாா் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தனியாா் பள்ளி பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டிகள், இருக்கை வசதிகள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப் பான்களை அகற்றும்படியும் அறிவுறுத்தப் பட்டது.
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆலங்குளம் பகுதி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 463 பள்ளி பேருந்துகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவற்றில், தென்காசி பகுதியைச் சோ்ந்த 22 வாகனங்களும், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த 3 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், இன்றைய தினம் ஆய்வுக்கு உள்படுத்தப்படாத வாகனங்களும், தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ள வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட பிறகே பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா் மாரியப்பன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மணி பாரதி,வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) செல்வி, ஆலங்குளம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவல்லி ஆகியோா் கலந்து கொண்டனா்.