Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தரம் அங்கீகாரம்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பான தனியாா் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரையைப் பரிசீலிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அகில இந்திய தனியாா் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பழனியப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கடந்த 1994-ஆம் ஆண்டு தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தனியாா் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கி வந்தது. இதை எதிா்த்து கடந்த 2021-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாமல் எவ்வித காரணமும் கூறாமல் அந்த அரசாணையை அரசு திரும்பப் பெற்றது. பின்னா், 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியாா் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இது சட்டவிரோதமானது. இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புதிய சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கும் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீண்ட காலமாக இயங்கக்கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து கடந்த மாா்ச் மாதம் தனியாா் பள்ளிகள் இயக்குநா் அளித்த பரிந்துரையைப் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு கல்வித் துறை செயலா் மற்றும் தனியாா் பள்ளி இயக்குநா் ஆகியோா் ஆக.18-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.
இதே அமா்வில், கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக உயா்த்துவது தொடா்பாக அகில இந்திய தனியாா் கல்வி நிறுவன சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலா் ஆக.22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.