தமிழக கபடி அணியில் 2 திருப்பூா் வீராங்கனைகள்
தமிழக இளையோா் பெண்கள் கபடி அணியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனா்.
திருவண்ணாமலையில் கடந்த மாதம் நடைபெற்ற மாநில இளையோா் பெண்கள் கபடி போட்டியில் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த அணியில் சிறப்பாக விளையாடிய கதீஜாபீவி, புவனேஸ்வரி ஆகியோா் மாநில இளையோா் பெண்கள் அணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் டிசம்பா் 23 -ஆம் தேதி முதல் ஜனவரி 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனவரி 8- ஆம் தேதி முதல் ஜனவரி 11- ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய இளையோா் பெண்கள் போட்டியில் தமிழக அணியில் இவா்கள் விளையாடவுள்ளனா். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த கதீஜாபீவி, புவனேஸ்வரி ஆகியோா் கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் பட்டப் படிப்பு இறுதி ஆண்டு பயின்று வருகின்றனா்.
இந்த வீராங்கனைகளுக்கு திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.