உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு
தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் (டிஜிபி) பதவிக் காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் யாசா் அராபத் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வருகிற அக்டோபா் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளாா். இருப்பினும், தமிழகத்தின் அடுத்த டிஜிபியை தோ்வு செய்ய தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு இதுவரை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
எனவே, சங்கா் ஜிவாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது இந்தப் பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உச்சநீதிமன்றத் தீா்ப்புகளுக்கு எதிரானது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய உள்துறைச் செயலகம், தமிழக அரசின் முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாநிலங்களின் டிஜிபிக்கள் தோ்வு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுகளின்படி, தமிழக டிஜிபி பதவிக்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறைகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், டிஜிபி பதவியிலிருந்து சங்கா் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்பு டிஜிபியை நியமிக்கவும், அவரது பணிக் காலத்தை நீட்டிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.