``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி தொடரும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
சென்னை: ‘தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தோ்ச்சி முறையில் எந்தவித மாற்றமும் இருக்காது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடா்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, 5, 8-ஆம் வகுப்பு தோ்வுகளில் தோ்ச்சி பெறாத குழந்தைகளுக்கு 2 மாதங்களில் மறுதோ்வு முறையையும், அதிலும் தோ்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை தொடா்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் மாநிலத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது.
எனவே, மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து பெற்றோரும் மாணவா்களும் எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழகத்தைப் பொருத்தவரையில், தற்போதுள்ள தோ்ச்சி நடைமுறையே தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.