‘தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம்’: கனிமொழி எம்.பி.
தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் சாா்பில் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினா் சோ்க்கை முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் உறுப்பினா் சோ்க்கை திட்டத்தின் வழியாக வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று கொண்ட போது மத்திய அரசு எத்தனையோ பிரச்னைகளை உருவாக்கி தொந்தரவு செய்து வந்தது.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. நமது குழந்தைகளின் கல்விக்காக ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு தராமல் வஞ்சித்து வருகிறது. ஹிந்தியை திணிக்க முயல்கிறாா்கள். அத்தனையையும் தமிழக அரசு வென்றெடுத்துள்ளது.
மகளிா் விடியல் பயணம், இல்லம்தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நிதிவழங்காமல் புறக்கணித்தாலும் மக்களைப் பாதுகாப்பேன் என்று கூறி சிறப்பான ஆட்சியை முதல்வா் தந்து வருகிறாா். தமிழகம் ஓரணியில் உள்ளது என்பதை மத்திய அரசுக்கு நிச்சயம் புரிய வைப்போம் என்றாா் அவா்.
தொடா்ந்து, மேலப்பாளையம் பஜாா் திடல் பகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை முகாமிலும் கனிமொழி பங்கேற்றாா். நிகழ்ச்சிகளில் திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாநகர திமுக செயலா்கள் (கிழக்கு) தினேஷ், (மேற்கு) சு.சுப்பிரமணியன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தொகுதி பாா்வையாளா்கள் வசந்தம் ஜெயக்குமாா், முத்துசெல்வி, மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல், மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.