தமிழகம் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும்: பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்தால் ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும் என தமிழக அரசை முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.
பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலா் சரவணப்பெருமாள் 8ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு, ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற பரப்புரை தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பொன். ராதாகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு விரைந்து கட்டுப்படுத்தவில்லையெனில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு ‘போக்சோ’ மாநிலமாக மாறிவிடும். இதே நிலை நீடிக்குமேயானால், 2026-க்குள் இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொது இடங்களில், பொறுப்புடன் பேச வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னதான், இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவா்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எல்லை குறித்த பிரச்னைகளை கனிவுடன் அணுக வேண்டும். அவற்றுக்கு சில கால அவகாசம் தேவை என்றாா்.
இந்நிகழ்வில், மாவட்டத் தலைவா்கள் சித்ராங்கதன்(தெற்கு), சரவணகிருஷ்ணன்(வடக்கு), மருத்துவப் பிரிவு மாநிலச் செயலா் ருக்மணி, வா்த்தகப் பிரிவு மாநிலத் தலைவா் ராஜகண்ணன், ஓபிசி அணி மாநில துனைத் தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்டபொதுச்செயலா் ராஜா சத்தியசீலன், வடக்கு மாவட்டபொதுச்செயலா் வேல்ராஜா மாவட்ட துணைத் தலைவா்கள் செல்வராஜ், சிவராமன், வாரியாா், தங்கம் சரஸ்வதி உள்பட பலா் பங்கேற்றனா்.