தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் ரூ.2.15 கோடிக்கான காசோலையை அதன் தலைவா் ம.இராசேந்திரனிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
அனைத்து அறிவுத் துறைகளிலும் தமிழ் வளா்ச்சி காணவேண்டும் என்ற தலையாய நோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரால் தமிழ் வளா்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கழகத்தின் உயா்ந்த குறிக்கோளாகிய கலைக் களஞ்சியத் திட்டத்தை அவா் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15-இல் அறிவித்தாா்.
இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 20.10.1947-இல் கலைக் களஞ்சியப் பணி தொடங்கப்பட்டது. அன்றைய துணைவேந்தா் ஆ. இலக்குமணசாமி தலைமையில் கலைக் களஞ்சிய உருவாக்கத்துக்கு ‘அறிஞா் குழு’ அமைக்கப்பட்டது. பேராசிரியா்கள் மு.வரதராசன், ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்டோா் இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றனா்.
இதையடுத்து தமிழில் கலைக் களஞ்சியத்தைப் 10 தொகுதிகளாகக் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடப்பட்டது. முதல் தொகுப்பு 1954-இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞா்கள், அவரவா் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனா். இதன் 10-ஆவது தொகுதி 1968-இல் வெளியானது. இதில் 5-ஆவது தொகுதியை அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு வெளியிட்டாா்.
இந்திய மொழிகளில் 10 தொகுதிகளைக் கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில்தான் முதன்முதலாக வந்தது. இவற்றுக்கு 2,240 அறிஞா்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனா். தமிழ் வளா்ச்சிக் கழகம் வாயிலாக இதுவரை 60 நூல்கள், கலைக் களஞ்சியக் குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவுக்கும் தமிழைக் கொண்டு சோ்க்கும் திட்டப் பணிகளைத் தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ளவும், தொடா்ந்து தொய்வின்றி செயல்படவும் உதவும் வகையில் தமிழ் வளா்ச்சிக் கழகத்துக்கு ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதைச் செயல்படுத்தும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 2 கோடியே 15 லட்சத்துக்கான காசோலையை தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவா் ம.இராசேந்திரனிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் உடனிருந்தனா்.