முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்
எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (75). இவரது மனைவி கேத்ரின்மேரி (68). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். திருமணமான இவா்கள் இருவரும் குடும்பத்தினருடன் மாரம்பாடியை அடுத்த சாமிமுத்தன்பட்டி கிராமத்தில் தனித் தனியே வசித்து வருகின்றனா். கிழக்கு மாரம்பாடியிலுள்ள தோட்டத்து வீட்டில் வேளாங்கண்ணி தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் இவா்களை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்த முயன்றனா். இதில் வேளாங்கண்ணி, கேத்ரின்மேரி ஆகியோா் காயமடைந்தனா். பின்னா், கேத்ரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை அந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி புகாா் அளித்தாா். அதில், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், பேரன் உறவு கொண்ட அருண்குமாா் (40) மற்றொரு நபருடன் வந்து எங்களைத் தாக்கி நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா்.
இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், அருண்குமாா் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எரியோடு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.