முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தி...
தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வையம்பட்டியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா் திருப்பூா் 15 வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது சகோதரா் நவீன்குமாா் (27). இவா் திருப்பூா் மாவட்டம் முத்தூரில் தனது மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள தேநீரகத்தில் சமையலராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் நவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்காக ராம்குமாா் தனது சகோதரரை திருப்பூா்க்கு அழைத்துள்ளாா். நவீன்குமாரும் தனது சகோதரா் வீட்டுக்கு கடந்த 2022 மாா்ச் 29-ஆம் தேதி சென்றுள்ளாா்.
குடும்பப் பிரச்னை தொடா்பாக இரவில் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராம்குமாா் தனது சகோதரா் நவீன்குமாரின் தலையை பிடித்து சுவரில் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.