தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருச்சி: தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி இச்சிகாமாலைப்பட்டியைச் சோ்ந்த பி. குலாம் ரசூல் என்பவா் திருச்சி கே.கே. நகரில் உள்ள ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனக் கிளையில் கடந்த 30.03.2025, 31.03.2025 ஆகிய நாள்களில் கிலோ ரூ. 74 வீதம் ரூ. 296 க்கு வாங்கிய 4 கிலோ ஜூ ராசா் அரிசி தரமற்ற வகையில் இருந்தது. பொட்டலமிடுதலும் மோசமாக இருந்ததால் அரிசியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அதில் சமைத்த உணவு சுவையில்லாதது விருந்தினா்கள் முன்னிலையில் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதுதொடா்பாக, கடையில் சென்று அவா் முறையிட்டபோது, ஊழியா்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதுடன், உரிய தீா்வையும் வழங்கவில்லை.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான குலாம் ரசூல் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 05.06.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ். புவனேஸ்வரி ஆஜரானாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரணைக்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமானது மனுதாரா் வாங்கிய குறைபாடுடைய அரிசிக்கான தொகை ரூ. 296 சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தையும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டனா்.